அன்று இரவு விடியலுக்காக
எங்கள் கிராமம் அமைதியாகக்
காத்துக்கொண்டிருந்தது .
மின்னல் வேகத்தில்
வெள்ளை வண்டி ஒன்று
கிராமத்திற்குள் வந்து நின்றது .
கண்ணிமைக்கும் நேரந்தான்
வண்டிக்குள்ளிருந்து பாய்ந்தார்கள்
எங்கள் குடிசைக்குள் துப்பாக்கிகளோடு !
"அய்யோ,அம்மா ,அப்பா !"
என்ற அபயக் குரலோடு
மூச்சு வாங்க வீட்டுக்குள்ளிருந்து
ஓடி வந்தார்கள் எங்கள் பாட்டாளி மக்கள் !
இந்த ஓலங்கள் ஊரையே உலுக்கிவிட்டன
அக்கம் பக்கத்தில் உள்ள
அக்கா தங்கச்சிகளும் தாய்மார்களும்
உயிரைப் பிடித்துக் கொண்டு
உடமைகளை உதறி விட்டு
அரண்டு சுருண்டு ஓடினார்கள் ...
அண்டை ஊருக்குள் அடைக்கலமாக .
அது மட்டுமா
படுக்கையில் பால்குடித்துக் கொண்டிருந்த
பச்சிளங் குழந்தையொன்றை
வாரி அணைத்துக் கொண்டு
ஒரு தாய்
உதிரம் சொட்டச் சொட்ட ஓடி ஒளிந்தாள்.
அன்றுதான்
அந்தக் குழந்தை இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து
இரண்டாவது வாரத்தை எட்டிப் பிடிக்கிறது .
தூங்கிக் கிடந்த எங்கள் சின்னஞ் சிறுசுகளோ
திக்குத் தெரியாமல் பறந்து போயின
பல்வேறு திசைகளில் ...
அது மட்டுமா
படுக்கையில் பால்குடித்துக் கொண்டிருந்த
பச்சிளங் குழந்தையொன்றை
வாரி அணைத்துக் கொண்டு
ஒரு தாய்
உதிரம் சொட்டச் சொட்ட ஓடி ஒளிந்தாள்.
அன்றுதான்
அந்தக் குழந்தை இந்தப் புண்ணிய பூமியில் பிறந்து
இரண்டாவது வாரத்தை எட்டிப் பிடிக்கிறது .
தூங்கிக் கிடந்த எங்கள் சின்னஞ் சிறுசுகளோ
திக்குத் தெரியாமல் பறந்து போயின
பல்வேறு திசைகளில் ...
அன்று இரவு
விடியலுக்காக எங்கள் கிராமம்
அமைதியாகக் காத்துக்கொண்டிருந்தது .
ஆம்
எங்கள் உழைப்பின் சிங்கங்கள்
சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த
காசு பணங்கள் கொள்ளை போயின !
எங்கள் உயிருக்கும் உழைப்புக்கும்
உற்ற நண்பனாய் இருந்துவரும்
ஆடுகளையும் மாடுகளையும்
முதுகில் குத்தினார்கள்
புத்தியுள்ள மனிதர்கள்
துப்பாக்கி முனையிலுள்ள கத்தியினால்!
பாவம்
அவை வாய் விட்டு
அழ முடியாமல் கண்ணீர் சிந்தின !
பாருக்குள்ளே நல்லநாடு எங்கள்
பாரதநாடு -என்றல்லவா
பாடி விட்டுச் சென்றான் அந்தப் பாரதி !
இன்று
இந்தப் பாடல் வரிகளை
நினைக்கும் பொது எங்களுக்கு ஐயம் வருகிறது.
இது எங்கள் நாடுதானா?
ஆதிக்கம் செலுத்தும் அதிகார வர்க்கங்களே!
நாங்களும் உங்களைப் போல் மனிதர்கள்தானே !
இன்னும் ஏன் எங்களை அடிமையாகவே
நினைக்கிறீர்கள் ?
வெள்ளை வண்டியில் வந்து
ஊரைச் சிவப்பாக்குகிறீர்கள் ?
சாதி ஒழிப்போம் என்று
மூச்சுக்கு முந்நூறு முறை
பிரசங்கம் செய்கிறீர்கள்
சாதியை ஒழிப்பது இப்படிக் கொன்றுதானா?
நம்நாடு ஒரு சுதந்திர நாடல்லவா ?
பின்னர் ஏன் நமக்குள் ஏற்றத் தாழ்வுகள் !
நாங்கள்
உங்கள் சொத்துக்களையா கேட்கிறோம் ?
எங்கள் உரிமைகளைத்தானே கேட்கிறோம் !
இதைக் கேட்டால் நாங்கள்
வன்முறையாளர்கள் ,தீவிரவாதிகள்
பயங்கரவாதிகள் என்ற பட்டமா ?
மனிதர்களே ! கொஞ்சம் சிந்தியுங்கள்!
நாங்களோ அமைதியை விரும்பும் ஆழ்கடல் !
அடக்கு முறைகளுக்கு அடிபணிய மாட்டோம் !
அன்பு காட்டுபவர்களை அரவணைப்போம் !
அமைதி குலைப்போரைப் புறக்கணிப்போம் !
சமத்துவம் சகோதரத்துவம் எங்கள் உயிர் மூச்சு !
எங்களை மிதித்தால் விபரீதங்களாகும்!
மீறினால், விபத்துகளாகும்!
மலைகளோடு மோதவேண்டாம் !
மோதினால் நீங்கள் முகமிழந்து போவீ ர்கள் !
நாங்கள் புழுக்கள் அல்ல நசுக்கி விடுவதற்கு !
பொறுமையாகப் பாயும் புலிகள் !
பாய்ந்தால், யாரை அடிக்குமென்று
எங்களுக்கே தெரியாது !
சாது மிரண்டால் காடு கொள்ளாது !
குண்டாந்தடி வெல்லாது ! குண்டுகளும் வெல்லாது !
நாங்கள் தீ
நல்லவர்களுக்குத் தீபங்களாவோம்!
அல்லாதவர்க்குத் தீ மூட்டுவோம் !
o



