Monday, 21 May 2012

காக்கிக்கும் கருப்புக்கும்


நேற்று வரை
அடிமை விலங்காய்
முடங்கிக் கிடந்தோம் . 

காசுக்கும்  மதுவுக்கும் 
கட்டில்களாய் மெத்தைகளாய்...

இன்று 
கிழக்கும் மேற்கும்சந்தித்துக்கொண்டன .

தனித்தனிக் கூண்டில்
அடைத்து   வைக்கப் பட்டிருந்த
சிங்கங்களும் புலிகளும் ஒன்றையொன்று
கட்டித் தழுவிக் கொண்டன.

இனி 
எந்தச் சாட்டை அடிக்கும் மண்டிஇடாது .
எந்த அறுசுவைக்கும் நாக்கை நீட்டாது .

நீண்டநாட்களாய் இவர்களின்
மனக்காட்டில் புகைந்துகொண்டிருந்த கோபம்
இன்று நெருப்பானது. 

எரியப்  போவது 
மண் குடிசைகள் அல்ல ...

இப்போர்வீரர்கள்
அலங்கார வார்த்தைகளையும் 
அலங்கார பொம்மைகளையும்
கேட்கப் போவதுமில்லை.
பார்க்கப் போவதுமில்லை. 

 ஏனென்றால்
 கேட்டுப் பார்த்து விட்டார்கள்
 பார்த்துக் கேட்டுவிட்டார்கள்.

எந்த பயனும்
உழைப்பவனை உயர்த்துவதாக இல்லை.

இந்த ஏற்றத்தாழ்வுகளைப்
 பகிர்ந்து அளிக்கவே   உழைக்கும் வர்க்கம் 
புறப்பட்டுவிட்டது...

இவர்கள்
 புரிய வைப்பார்கள்.
 பூமியை நனைய வைப்பார்கள். 

காக்கிச் சட்டைக்கும்
கருப்புச் சட்டைக்கும்
இனி வேலை இல்லை 
என்று சொல்ல வைப்பார்கள் .

 0 

Sunday, 20 May 2012

கான்வென்ட் டீச்சர்கள்



படப்பிடிப்பிற்குச் செல்வதைப்போல்
ஒப்பனையோடு கையில்
ஒரு அழகிய கைப்பை! 

 துணிக்கடையில் வரவேற்கும் 
 அலங்கார பொம்மைகளைப்போல் 
வண்ண வண்ண அணிவகுப்பு ! 

அரைகுறையாய்ச் சாப்பிட்டு
 அவசரமாய்ப் பஸ் பிடித்து
 மணி அடிப்பதற்குள் 
பள்ளியின் முதல்வரின்
 பார்வைக்குப்   பவ்வியமாய்
 வணக்கம்போட்டு 
வகுப்பறையில் நாளும் ...  

வீட்டில்தொல்லை தாங்காமல்
 மூட்டை முடிச்சிகளோடு 
பிஞ்சுக் குழந்தைகளையும்
 கொண்டு வந்து தள்ளிவிட்டுச்
 செல்லும் பெற்றோர்கள்...

அழமட்டுமே தெரிந்திருக்கும்
 குழந்தைகளுக்கு அ, ஆ ....
சொல்ல வைத்துத் 
தொண்டத்தண்ணி வற்றிப்போகும் 
 கான்வென்ட் டீச்சருக்கு ! 

அடிக்கடி தேர்வு எழுதி 
அலுத்துப்போகும் குழந்தைகள் !

 விடைத்தாளைத் திருத்தித் திருத்தி 
வேதனையில் மூழ்கிப்போகும்
 கான்வென்ட் டீச்சர்கள்...

அதிக மதிப்பெண்கள்  வாங்கலையே
 என அலட்டிக்கொள்ளும் பெற்றோர்கள் ! 

பள்ளியின் தரத்தை உயர்த்த
 பள்ளி நிர்வாகியின்
 தரங்கெட்ட அர்ச்சனைகள்! 

இத்தனையும் சுமந்துகொண்டு 
பள்ளியை அலங்கரிக்கும்  
கான்வென்ட் டீச்சர்கள்...

ஆலையில் பிழிந்த சக்கையில் கூட
 எறும்புகள் ஊறும்
இவர்களைப் பிழிந்தால்
ஒரு சொட்டு இரத்தம் கூடக்
கண்ணீராய் மாறும் ! 

இவர்கள் பார்வைக்கு மட்டுமே
சிவப்பு ரோஜாக்கள்!

வேலை  கிடைக்குமென்று
 வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
புதுப்பித்து ...புது ப்பித்து
இவர்களின் தலைமுடியோ
வெள்ளை அடித்துக்கொண்ட
அதிசயம்தான் நிகழ்ந்துபோனது !

போடுகின்ற சோப்புக்கும்
 அடிக்கின்ற பவுடருக்கும்
 நாளுக்கொரு சேலைக்கும்
 கொடுக்கின்ற ஊதியம் சரியாய்ப் போகும்.

பின்னர் ,அவர்களுக்கு எங்கே
அவர்கள் வாழ்க்கையைப் பற்றி
 யோசிக்க நேரம் !
 யோசிப்பதெல்லாம்
 அவர்களிடம் விட்டுச் செல்லும் 
 பள்ளிக்  குழந்தைகளின் படிப்பை மட்டுமே !

பெருகிப்போனது மாணவர்களின் எண்ணிக்கை
 உயர்ந்துபோனது பெற்றோர்களின்
 நன்கொடையால் ...பள்ளியின் கட்டிடங்கள் !

இன்னும் உயராமல் இருப்பது
 அவர்கள் வாழ்க்கை மட்டுமே !

அலங்கோல ஆட்சியாளர்களின் சட்டத்தில்
அப்பனும் பிள்ளையும்
 அருகருகே அமர்ந்து டி.ஆர் .பி . எழுதிய
அதிசயம் தான் நிகழ்ந்து  போனது !

என்று ஒழியும் இந்த டி.ஆர் .பி .
அன்று தணியும் அவர்கள் தாகம்!


Facebook Google Digg Pinterest