அம்மா !
நான் பள்ளியிலிருந்து வீடு திரும்புகையில்
முடிச்சி வைத்திருந்த
முந்தனையை அவிழ்ப்பாய்.
என்னவென்று கேட்ப்பேன்.
யாரோ ஒருத்தர் கொடுத்தாங்க
காலையில என்பாய்.
மகிழ்ச்சியோடு தின்பேன்
அந்தத் தின்பண்டத்தை!
உன்னை உற்றுப் பார்க்கையில்
சேறும் சகதியோடு உன் மேனியெல்லாம்
காய்ந்த சருகைப்போல் வாசம் வீசும் .
சூரியன் உன்னைச் சுட்டேரித்தே
உன் முதுகெல்லாம் பளபளக்கும்
மீன் செதில்களைப்போல் .
உலைக்கையும், களைக்கட்டையும்
பிடித்துப் பிடித்தே கைகள் இரண்டும்
உருக்குலைந்து போயிருக்கும்.
ஏரியெல்லாம் சுற்றித் திரிந்து
கூடை கூடையாய்ச்
சாணத்தைக் கொண்டுவந்து
நிலத்திற்கு உரமாக்குவாய் .
நெல்பயிரும் நன்றாய் வளரும் .
கூடவே களையும், பூச்சிகளும்
திருப்பதிபோல் திட்டுதிட்டாய் மொட்டையடிக்கும் !
ஓரிருமுறை தண்ணீர் பாச்சிவிட்டு
மூன்றில் ஒருபங்கைக் கணக்காய்ப்
பதரைக்கூட விடாமல்
பிரித்துக் கொள்வான் பண்ணையார் !
மீதமுள்ள நெல்மூட்டையை
வாங்கிய கடனுக்கு வட்டியாகக் கொடுத்துவிட்டு
இரவு பகல் பாராமல்
கூழைக் குடித்தே உயிர் வளர்த்தாய் .
அம்மா !
நீ யார் வீட்டிலும்
பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கமாட்டாய் .
ஏனென்று கேட்டால் ...
அங்கெல்லாம் சுத்தமிருக்காது என்பாய் .
வெற்றிலையும் பாக்கும்
இருந்துவிட்டால் போதும்
வயிறு நிரம்பும் என்பாய் !
அதோடு இல்லாமல் ...
வீட்டைச்சுற்றிச் சிவப்புச்சாயம்
அடித்து வைப்பாய்!
கட்டியிருக்கும் புடவை கந்தலான பிறகும்
கட்டிக்கிழிப்பாய் .
கிழிந்தபின், கரித்துணியாய் வந்து நிற்கும் !
அம்மா!
நீ சேர்த்து வைத்து விட்டுப்போன
ஆள் உயரம் அடுக்கி வைக்கப்பட்ட
மண்சட்டிப் பானைகள்
வீட்டிற்குள் படை வீரர்களாய்
வரிசையாய் நிற்கும் !
மலைக்குன்று போல் நெல்குற்றும் உரலும்
வண்டிச் சக்கரதைப் போல்
கேழ்வரகு அறைக்கும் கல் எந்திரமும்
எண்ணெய் பிழியும் செக்கைப் போல்
மாவு அறைக்கும் உரலும்
வீட்டின் ஒதுக்குப்புறம்
உன் நினைவுச்ச் சின்னங்களாய் !
அதுமட்டுமா ?
வீட்டின் மண்தரையைச்
சாணத்தால் மெழுகி மெழுகிக்
கண்ணாடிபோல் வைத்திருப்பாய் !
மழைக்காலம் வந்துவிட்டால்
கண்ணாடிபோல் உள்ள தரை
சொறி சிரங்காய்ச் சிலிர்த்து நிற்கும் !
அம்மா !
நான் எத்தனை முறை
அழகு தமிழ் பேசினாலும் ,எழுதினாலும்
"அம்மா " என்று கூப்பிடும்
சொல்லிற்கு ஈடாகுமா !
உன் பிரிவு
இன்றும்,என் கண்களைக்
குளமாக்கி விட்டுச் செல்கிறதே!
O




No comments:
Post a Comment