ஆற்றங்கரையிலும்
வாய்க்கால் வரப்பின் ஓரத்திலும்
வானுயர நின்றபடி
விவசாயின் நிலங்களைக்
காலம் காலமாய்க்
காவல் காத்து வரும்
காவல்காரன் நான்!
வெய்யில் காய்ந்தாலும்
மழை பொழிந்தாலும்
புயல் அடித்தாலும்
ஒற்றைக்காலோடு
தவமிருப்பவன் நான்!
என் அடையாளாச் சின்னம்
கறுப்புதான்!
ஏனென்றால் என்னோடு இருக்கும்
விவசாயின் நிறமும் அதுதானே!
நான் இல்லாத கிராமங்கள் இல்லை
கிராமங்கள் இல்லாமல் நானுமில்லை!
என்னைக் குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை
விரும்பாதவர்கள் யாருமில்லை!
கார்த்திகை மாதமும்
சித்திரை மாதமும் வந்து விட்டால்
என் கிராமத்துக் குழந்தைகளுக்குக்
கொண்டாட்டம் தான் !
என்னால் அழிந்தவர்கள் யாருமில்லை
என்னை அழிப்பவர்கள் தான் ஏராளம் !
நான் 'கறுப்புத் தங்கம்' ! எப்படி?
காய்ந்தால் சருகு
நனைந்தால் குடை
போதைக்குக் கள்ளு
கோடைக்கு நுங்கு
தாகத்திற்குப் பதநீர்
ஏழைக்கு விசிறி
அடுப்புக்கு விறகு
வீடுகட்ட கயிறு
வெய்யிலுக்கு நிழல்
வெட்டிய பின் வீட்டிற்கு வாரை
விளையாட்டுக்குப் பொம்மை
இன்னும் வெவ்வேறு வடிவில்
அவ்வப்போது பயன்படுவேன் !
என்னில் எதுதான்
எம் மக்களுக்குப் பயனில்லை!
நான்தான் மரம்
இல்லை
அதிசய மரம்!
'பனைமரம்' நான்தான்!
அடுத்துவரும் தலைமுறைக்கு
அடையாளச் சின்னமும்
நான்தான்... நான்தான் ...!
O




No comments:
Post a Comment