Thursday, 29 December 2011

என் நந்தவனத்தில் ....

கல்லூரிச் சோலையில்
           காலெடுத்து வைக்கையிலே--உன்
                       கண்பட்டு வீழ்ந்து விட்டேன்
                                  காதல் சிறையினிலே!

காதல் மொழிப்பேசி நான்
           கரம்பிடிக்க வருகையிலே --என்
                      கன்னத்தில் கொடுத்து விட்டாய்
                                கனிமுத்தம்  ஒன்றனையே !
காதல் கவி பாடக்
           கவி நான் வருகையிலே --உன்
                       கைத் தட்டிக் கவிழ்த்து விட்டாய்
                                   கவியரங்க மேடையிலே!

மனசுக்குள் இடம் பிடிக்க நான்
        மாதவம் புரிகையிலே--உன் 
                மணவறைக்குள்  அழைத்து விட்டாய்
                           மனசுக்குப்  பிடித்தவனையே ! 

புகைப்படம் எடுக்க நான்
         புறப்படுகையிலே --உன்
                   புன்னகை மட்டும் அழித்து விட்டாய்
                            புகைப் படத்திற்குள்ளேயே!

நம் காலத்தின் சோதனையில்
         கரைந்து விட்ட நினைவுகளே --என்
                  காதல்  நந்தவனத்தில் பூத்துவிட்டன... 
                             கண்ணீர்ப் பூக்களாகவே ...!
                 

o                                                          

Thursday, 22 December 2011

காதல் கடிதங்கள் !

முன்னும் பின்னும்
முத்திரை பதிக்காமல்
உள்ளுக்குள் விலாசத்தை
விழுங்கிக் கொண்டு
பத்திரமாகப் போய்ச் சேரும்
தங்கக் கட்டிகள் !

புத்தக அறைக்குள்
புழுங்கிக் கொண்டு
தனிமைச் சுகத்தில்
பிரகாசிக்கும்
வெள்ளிக் கேடையங்கள் !

o

ஏன் மறந்தாள் ?

கல்லூரிக் காதலர்கள்
என்ற புத்தகத்தில்
மட்டும் மறவாமல்
என் பெயரை
அச்சடித்து
அவள் பெயருக்குப்
புகழ் சேர்த்துக் கொண்டவள்
அவள்
கல்யாண காகித்தில்
மட்டும் ஏன்
என் பெயரை
அச்சடிக்க
மறந்து விட்டாள் ?


o


உனக்கென்ன...!


என்னை
நீ பார்க்க வேண்டுமென்று
எனக்கோ
நீ
அவசர அழைப்பு விடுகிறாய்... !
பின்
அதை எண்ணியே
என்
இதயமல்லவா
எண்ணிக்கையை
மறந்து விடுகிறது !

என்னோடு
சிறிது நேரம்
சிரித்துப் பேசி விட்டு
நீ
பறந்து விடுகிறாய்... !
அதன் பிறகு
நானல்லவா
தவம் கிடக்கிறேன் ....
அதில் உள்ள
அர்த்தங்களை
ஆராய !


o


நான் ...நான்... நான்...


நான்
பாலைவனத்தில்
பயணம் செய்து கொண்டு
நந்தவனத்தைப் பற்றி
யோசிக்கிறேன் ....!

நான்
அமாவாசையில்
அமர்ந்து கொண்டு
பவுர்ணமியை
நினைத்துப்
பூஜிக்கிறேன் ...!

நான்
தனிமையில்
நின்று கொண்டு
காதல் கல்லறைக்குப் போகும்
வழியினைப்
படம் பிடித்துக் கொண்டிருக்கிறேன்...!                                 

நான்
முள்ளின் மீது
படுத்துக்கொண்டு
பஞ்சனையிடம்
யாசிக்கிறேன் ...!

நான்
கடலில் மூழ்கி
முத்தெடுத்துக்கொண்டு
கரையேறுவதற்கு
நீந்தக் கற்றுக் கொண்டிருக்கிறேன்...!


        
o

மனசுக்குள்  மகரந்தம் ...

அன்பே !
நீ
உன் சின்ன வயசை விட்டு
விடை பெறுவதற்கு முன்
உன்னை துரத்திப் பிடித்து
என்
மனசுக்குள்
ஊஞ்சல் கட்டி
அதில் ---
உன்னை
உறங்க வைத்திருக்கிறேன் !

நான்
நித்திரையிலிருந்து
நிவாரணம்
பெறுவதற்கு முன்
உன்னை மட்டுமே
என் மனத்திரையில்
காண வேண்டும்
என்றெண்ணி
என் மனசுக்குள்
மாட்டிவைத்திருக்கிறேன்
உன்
நிழற்படத்தில் ஒன்றை !

உனக்குள்
என்
நினைவை
நிலைப்படுத்தத்
பரிசுகள்
பல தரவேண்டுமென்று
பல நாட்கள்
தவமிருந்தேன் !
தவத்தின் பயனாக
என்
அன்பு முத்தங்களே
நீ
விரும்பும் பரிசாக
தேர்ந்தெடுத்தேன் !

நீ
சில நாட்கள்
என்னைப்
பார்க்க மறந்து விடுவதால்
ஏதாவது காரணம் காட்டி
என் மனசுக்குச்
சமாதானம் சொல்லிச்
சாந்தப் படுத்தி விடுவேன் !
ஆனால்--

நீ
பேசாமல் மட்டும்
நாள்களை
நகர்த்தி விட்டால்
என் மனசுக்குச்
சமதானப் படுத்த
உன்
சன்னிதானமே
சரணாலயம்!

ஒருநாள்
நீ
என்னிடமிருந்து
எட்டு அடி தூரம்
விலகியே நின்றிருந்தாய்
அந்த --
சிறு இடைவெளிக்குக்
காரணம் தெரிய
என்
கண்ணீரைத்
தூது விட்டேன் ...
அது சொன்னது...
இன்று
நீ
பூவைத் தொட்டால் கூடப்
பொசுங்கி விடுமென்று !

அன்பே !
நம்
உறவுக்குள்
சிறு
பூகம்பங்கள்
புறப்படலாம்
அது
நம் காதல் உறவை
மட்டும்
காயப் படுத்தாமல் போகட்டும் !

o         

நீ உன் இதயத்திலிருந்து



நீ உன் இதயத்திலிருந்து
என்னை இறக்கியதுமே நான்
கவிதையின் கழுத்தில்
 தாலி கட்டி விட்டேன் !

அதனால் தான்
கல்லறை கூட என்னைக்
காண மறுத்திட்டது!

பாவையே !
உன்
எண்ணங்கள் எல்லாம்
என் நலத்தில்தான் என்று
இராவணன் மனைவி
மண்டோதரியாய்ச் சுளுரைத்தாய் !
ஏனோ ----
திடீரென்று
இராவணன் தங்கை
சூர்ப்பனகைபோல்
நம்
சுகமான வாழ்வில்
சூதாடி விட்டாயே !


o


ஒரு
மனிதனுக்குத்
துன்பம்
தொடர்ந்து
வரும்போது
மரணதேவதை
அவனெதிரில்
நிர்வாணமாகக்
காட்சித் தருகிறாள் !

அந்தநேரமே
அவன்
அவள்மீது ஆசை
ஆசை கொண்டுவிட்டால்
மறுகணமே
அவனால்
அவள்
மகுடம்
சூட்டிக் கொள்கிறாள் !


 o

ஒவ்வொரு---
மனித இதயத்திலும்
ஒரு ஆன்மா
குடிகொண்டிருக்கிறது.
அது
சுதந்திரம் பெற்று
வெளிவரும் பொழுதுதான் 
அந்த
மனிதனுடைய
வளர்ச்சிப் பாதைக்கோ ...
அல்லது
அழிவுப் பாதைக்கோ ...
அது
வழி வகுக்கிறது !

o

Thursday, 15 December 2011

உனது ---


 உனது ---
 புன்னகை முத்துகள் 
 எனது  இதய அறைக்குள்
 பதிக்கப் பட்டுப் பார்வைக்கு
 வைக்கப் பட்டுள்ளன!

 உனது---
 பேச்சுகள்
 என் மனத்திரையில்  
 ஆனந்த ராகத்தில் 
 மறுபதிவு செய்யப்பட்டு 
 என்னைப் பரவசப்
 படுத்திக் கொண்டிருக்கின்றன!

 உனது ---
முக தரிசனம்
கிடைக்கும் போது
 நான்
அமாவாசைலிருந்து
விடை பெற்றுக்கொள்கிறேன்!

 உனது ---
 ஸ்பரிச தழும்புகள்
 எனக்குள் புகுந்து 
 உறவைப் புதுப்பித்து  
 விடுகின்றன!

o                                                      

Friday, 9 December 2011

இன்றைய கல்வி



இன்றைய கல்வியானவள்
காசுக்கு முந்தானை விரிப்பதால் தான்
ஆண்மை இல்லாதவன் அவளை
முதலில் மணந்து கொள்கிறான் !


கலப்புத் திருமணங்களை
என்று இந்த சமுதாயம்
மாலை போட்டு வரவேற்கிறதோ...
அன்று தான் சாதிக் கொடுமைகளைத்
தூண்டும்சக்திகளுக்குச் சமாதி கட்டமுடியும் !




நான் உன்னை நேசிக்கும் முன் ...
தங்க மாளிகையில் தங்கத்தை விற்கத்
தடை செய்து விட்டேன் !

இரவு தூக்கங்களுக்கு முற்றுப் புள்ளி   
வைத்து  முக்காடு போட்டு விட்டேன் !

கண்ணீருக்கு அட்வான்சாக கண்களுக்கோ
கருணை  மனு கொடுத்து விட்டேன் !  
சாட்சியம் இல்லாமல் போகச் சாதி பேய்களுக்கு
சமாதி கட்டி விட்டேன் !

நான் உன்னை நேசிக்கும் முன் ...
சமுதாய சடங்குகளைத் தூக்கிச்
சாக்கடையில் போட்டுவிட்டேன் !

உறவினர்களுக்கோ மறக்காமல்
தேதி குறித்து ஓலையனுப்பி விட்டேன்
விருந்துக்கு மட்டும் வரச்சொல்லி !

பெற்றோர்களுக்கோ அவசரத் தந்தி
அனுப்பிவிட்டேன் ...
நம் இருவரையும் பதிவுத்
திருமண நிலையத்திலிருந்து
பத்திரமாக அழைத்துச் செல்ல !

இவையெல்லாம்---
நான் உன்னை நேசிக்கும் முன் ...
எனக்குள் எடுத்துக்கொண்ட
சத்திய பிரமாணங்கள் !

o  


நிலவே !
நீ
நெடுந் தொலைவில்
இருப்பதால்தான்
உன் அழகும் உன் கற்பும்
காப்பாற்றப் படுகிறது !

நீ
மட்டும்
அருகில் இருந்திருந்தால்
எத்தனைக் கவிஞர்கள்
உன்னைக் கற்பழித்திருப்பார்கள்
தெரியுமா!



அன்பே !
உனது கால்களை
அலங்கரித்துக் கொண்டிருந்த
வெள்ளிக் கொலுசு
வெளுத்துப் போய்விட்டதே !
என்ன காரணம் ?

கோடைக்கால கொடுமை
உன்
பாதங்களைப் பதம் பார்த்துவிட்டதா?!
இன்றே...
உன் பாதச் சுவடுகளின்
பாத அளவை
என் இதயத்தில் பதித்துவிடு!
தைத்துப் போடுகிறேன்
செருப்பாக ...!!




நான்
இப்பொழுதெல்லாம்
தனிமையைத்தான் தேடி
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
ஏனென்றால்
அப்பொழுதுதான்
கவிதை --என்ற பெண்ணிடம்
சுதந்திரமாகக்
காதல் கொள்ளமுடிகிறது !




பெண்கள்
திருமணத்திற்கு முன்
ஆண்களைக் கண்டு
அஞ்சுகிறார்கள் ?
திருமணத்திற்கு பின்
ஆண்கள்
பெண்களைக் கண்டு
அஞ்சுகிறார்கள்!


 o

உனக்கு
என்மேல் நம்பிக்கை
இல்லையென்றால்
நான்
உனக்கு எழுதிய
அந்தக் கடிதங்களை ....
ரசாயனப் பரிசோதனைக்கு
அனுப்பிவை ....!

பின்னர்
உனக்குத் தெரியவரும்
அதில் ---
ஓர் இதயம்
உருக்குலைந்து  
உருகிப்போனதென்று ! 


o                                                                                                                            


அன்பே !
என்
நினைவில்
பல மொட்டுக்கள்
மலராக
மலர்ந்தாலும்
மணப்பதில்லை !

நீ
என்
இதயத்தில்
இருக்கும் வரை !

o


என்
கவிதைகள்
ஒரு
காலக் கண்ணாடி!
அதில்
அடிக்கடி
என்
முகங்களை
நான்
சரி பார்த்துக் கொள்கிறேன் !




அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
அன்றே என் இதயத்துக்குள்
உன்னைச் சுமக்க ஆரம்பித்து விட்டேன் !
அங்கிருந்து ---
நீ கோரிக்கை மனு விடும் போதெல்லாம்
என் உணர்வுகள் வினாடிக்குள் உஷ்ணமாகி விடுகின்றன!
இதனால் ---
ஓய்வெடுக்கப்பட்ட என் நரம்புகளுக்கோ
புத்துணர்ச்சி கிடைத்து விடுகிறது !

அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
உனக்காக ஒரு காதல் காவியத்தையே
உருவாக்கி விட்டேன் !
அதனால்தான் ---
நான் கவிஞன் என்ற தகுதிக்குத்
தள்ளப்பட்டுவிட்டதாகப்
பல இதயங்களுக்குள் வரவேற்பு !
இந்த ---
புகழ்  ஏணியில் அமர்ந்து கொண்டுதான்
தினமும் கவிதை பூக்களால் அலங்கரித்து
உன்னழகை  ரசித்து  கொண்டிருக்கிறேன்....!                       

அன்பே !
நீ என் காதலை நிராகரித்து விட்டதால் ....
உன் எதிர்காலத்தைப் பற்றி
நான் சிந்திக்கத் தவறுவதில்லை ...
இதனால் ---
உன்னை எதிர் கொண்டு வரும்
பிரச்சனைகளுக்குப் பிராசித்தம் காண
உனக்கோ பிரியா விடையளிக்கின்றேன்!

அன்பே !
என்றைக்காவது ஒருநாள் ...
என்மேல் இரக்கப்பட்டால்
என் முகவரிக்கு உன் விலாசத்தை எழுது ...
அதுவரை முகவரியில்லாமல்
உன் எண்ணங்களை என்னிடம் குவியலாக்கு ...!


o   

தேர்தல் திருவிழா


இந்த ---
மாபெரும் திருவிழா தேதியில் தான்
 எங்கள்  ஊரில் முழுச் சுதந்திர
 தினமாகக் கொண்டாடப் படுகிறது !

எங்களு டைய  மனிதாபிமான
 உரிமைகள் கூட  அன்று தானே
 அரங்கேற்றமடைகிறது ! 

ஐந்து வருடத் திற்கு  முன்
 எங்கள் ஓட்டுரிமைகளைக் கொள்ளையடித்துக்
' கொள்ளை' கொண்டவரெல்லாம்
 மறுபடியும் எங்கள் முன்
 தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவரும் 
புண்ணிய நாளல்லவா அது!

அன்று தானே நாங்கள் எல்லோரும் 
அவர்களுக்கு முன் கடவுளாகக் 
காட்சித்தந்து   வாக்குகளை அளித்துவிட்டு 
வாய்பேசாஊமையாகி விடுகிறோம் !

புண்ணாகிப் போன எங்கள் பாதங்களைச்
சுமந்துச் செல்ல 
எத்தனை சொகுசு வண்டிகள் 
அன்று அனுப்பப் படுகிறது
 எங்கள் வீட்டிற்கு முன் ...!

எங்கள் மூதாதையர்கள் கூட 
அன்றுதானே மறுபிறவி எடுத்துவிட்டு 
எங்களுக்குத் தெரியாமலேயே 
மறைந்து விடுகிறார்கள் !

மழைக் காலங்களில்
ஒப்பாரி வைத்து ஒழுகிக் கொண்டிருக்கும்
ஓலைக்குடிசைகளெல்லாம் 
அன்று ஓட்டுகுடிசைகளாகத் தன்னைப் 
புதுப்பித்துக் கொள்ளும் 
புத்தாண்டு   தினமல்லவா அது !

சில்லரைகளை எண்ணிக் கொண்டிருந்த 
எங்கள் கரங்களுக்குள் 
கரன்சி நோட்டுக்களாக வந்து குவியும்
நட்சித்திர  இரவல்லவா அது !

முடமாக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கை 
மனுக்களெல்லாம் அன்றுதானே 
அவசர சிகிச்சைப் பகுதிக்கு
அழைத்து வரப்பட்டு
நிவாரணம் அளிக்கப்படுகிறது ?


o
                                

Thursday, 8 December 2011

இந்தத் தீர்ப்பு சரிதானா ?

ஜா.வினாயகமூர்த்தி-யின்
*மனசுக்குள் மகரந்தம்* கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...

இவளைப் பெண்பார்க்க வருகின்ற
வரன்களின் வருகைக்காக ...
இவள் நந்தவனம்
எத்தனை நாளைக்குத்தான்
பூத்துக்கொண்டே இருக்கும் ...
இவள் கூந்தலை அலங்கரிக்க !

 தேய்ந்து போன இவள் நினைவுகள் கூட
அன்று தான் வளர்பிறையாகிறது..!
இவளைப் பார்த்துவிட்டு சென்றவரெல்லாம்
இவள் கண்களை அல்லவா
ரணமாக்கி விட்டுச் சென்றார்கள் !

மறுநாளே இவள் கழுத்தில்
மாலைவிழும் என்று
ஆசையோடு காத்திருக்கையில் ...
அவர்களிடமிருந்து கடுதாசி தான் வந்தது !

மூடப்பட்டிருந்த இவள் கண்ணீரின்
கதவை திறந்து வைக்குமாறு
அந்தக் கடிதம் மீண்டும்
இவளுக்கு ஞாபகப் படுத்தியது !

இவளைப் பார்க்க வந்தவர்கள்
தராசுத் தட்டை அல்லவா
தூக்கிக் கொண்டு வந்தார்கள் !

அவர்களை விசாரித்ததில்
 மார்வாடிக் கடைக்குப் போவதை மறந்து
இவள் வீட்டிற்கு நுழைந்து விட்டார்களாம் !

வந்து சென்ற வரன்கள் ஒவ்வொருவரும்
 இவள் அழகை ஓரக்கண்ணால்
 உரசிப் பார்த்த போது நம்மை யாரவது
 வன்  நிச்சையமாக கடத்திக் கொண்டு
 போய்விடுவான் என்று எண்ணியே
 இவள் நினைவுகள்  ஒவ்வொரு நாளும் ஓட்டம் பிடிக்கும் ..!

பின் வேறொரு வரன் இவளைப்
 பெண் பார்க்க வருவதாக சேதி வரும்போது
 ஓட்டம் பிடித்த இவள்நினைவுகள்
தடுக்கி விழுந்து இவள் மனசுக்குள் நொண்டியடிக்கும் ..!

 இவளைப் பார்க்கவரும்
 அந்தத் திரு நாள்தான் இவள் உழைப்பிற்கு
அளிக்கப்படும் விடுமுறை நாளாகும்!

இவள் அணிந்து கொள்ளும்
 கண்ணாடி வளையலுக்குக் கூட
அன்று தான்அதன் ஆயுசில் ஒருநாள் கூடுகிறது !

  இவளை உரசும் உணர்ச்சிகள்
 எத்தனை நாளைக்குத்தான்
 தீப்பொறியாகவே தெரித்து விழும் ?
               
எங்குச் சென்றாலும்  ஊருக்குள் கிசுகிசுப்புச் செய்தி
 இவள் இன்னும் தாலி ஏறாதவள் என்று !

ஒருவன் தாராள மனசோடு
தங்கத்தைக் குறைத்து
தலையில் வெள்ளிக் கம்பியோடு
இரண்டாம் தாரமாக இவளைக் கட்டிக் கொள்ள
காரோடுவந்தான் !
        
இவள் பெற்றோர்களும் எத்தனை காலம்தான்
இவள் வயதை
குறைத்துக்கொண்டே போவார்கள்?

சுமை குறைந்த தென்று தள்ளி விட்டார்கள் ...
இவளும் கழுத்தை நீட்டினாள்
காரில் வந்தவனுக்கே !

விடியற்காலையில்  வீதியெங்கும்
 பேப்பரில் பரபரப்புச் செய்தி... 
முதலிரவில் புதுப்பெண் தற்கொலை !

மறுநாள்   நீதி மன்றத்தில் வழக்கு ...
இவள் ஒரு மன நோயாளி என்று தீர்ப்பு !


O
Facebook Google Digg Pinterest