இந்த ---
மாபெரும் திருவிழா தேதியில் தான்
எங்கள் ஊரில் முழுச் சுதந்திர
தினமாகக் கொண்டாடப் படுகிறது !
எங்களு டைய மனிதாபிமான
உரிமைகள் கூட அன்று தானே
அரங்கேற்றமடைகிறது !
ஐந்து வருடத் திற்கு முன்
எங்கள் ஓட்டுரிமைகளைக் கொள்ளையடித்துக்
' கொள்ளை' கொண்டவரெல்லாம்
மறுபடியும் எங்கள் முன்
தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவரும்
புண்ணிய நாளல்லவா அது!
அன்று தானே நாங்கள் எல்லோரும்
அவர்களுக்கு முன் கடவுளாகக்
காட்சித்தந்து வாக்குகளை அளித்துவிட்டு
வாய்பேசாஊமையாகி விடுகிறோம் !
புண்ணாகிப் போன எங்கள் பாதங்களைச்
சுமந்துச் செல்ல
எத்தனை சொகுசு வண்டிகள்
அன்று அனுப்பப் படுகிறது
எங்கள் வீட்டிற்கு முன் ...!
எங்கள் மூதாதையர்கள் கூட
அன்றுதானே மறுபிறவி எடுத்துவிட்டு
எங்களுக்குத் தெரியாமலேயே
மறைந்து விடுகிறார்கள் !
மழைக் காலங்களில்
ஒப்பாரி வைத்து ஒழுகிக் கொண்டிருக்கும்
ஓலைக்குடிசைகளெல்லாம்
அன்று ஓட்டுகுடிசைகளாகத் தன்னைப்
புதுப்பித்துக் கொள்ளும்
புத்தாண்டு தினமல்லவா அது !
சில்லரைகளை எண்ணிக் கொண்டிருந்த
எங்கள் கரங்களுக்குள்
கரன்சி நோட்டுக்களாக வந்து குவியும்
நட்சித்திர இரவல்லவா அது !
முடமாக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கை
மனுக்களெல்லாம் அன்றுதானே
அவசர சிகிச்சைப் பகுதிக்கு
அழைத்து வரப்பட்டு
நிவாரணம் அளிக்கப்படுகிறது ?
o




No comments:
Post a Comment