Thursday, 8 December 2011

இந்தத் தீர்ப்பு சரிதானா ?

ஜா.வினாயகமூர்த்தி-யின்
*மனசுக்குள் மகரந்தம்* கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்...

இவளைப் பெண்பார்க்க வருகின்ற
வரன்களின் வருகைக்காக ...
இவள் நந்தவனம்
எத்தனை நாளைக்குத்தான்
பூத்துக்கொண்டே இருக்கும் ...
இவள் கூந்தலை அலங்கரிக்க !

 தேய்ந்து போன இவள் நினைவுகள் கூட
அன்று தான் வளர்பிறையாகிறது..!
இவளைப் பார்த்துவிட்டு சென்றவரெல்லாம்
இவள் கண்களை அல்லவா
ரணமாக்கி விட்டுச் சென்றார்கள் !

மறுநாளே இவள் கழுத்தில்
மாலைவிழும் என்று
ஆசையோடு காத்திருக்கையில் ...
அவர்களிடமிருந்து கடுதாசி தான் வந்தது !

மூடப்பட்டிருந்த இவள் கண்ணீரின்
கதவை திறந்து வைக்குமாறு
அந்தக் கடிதம் மீண்டும்
இவளுக்கு ஞாபகப் படுத்தியது !

இவளைப் பார்க்க வந்தவர்கள்
தராசுத் தட்டை அல்லவா
தூக்கிக் கொண்டு வந்தார்கள் !

அவர்களை விசாரித்ததில்
 மார்வாடிக் கடைக்குப் போவதை மறந்து
இவள் வீட்டிற்கு நுழைந்து விட்டார்களாம் !

வந்து சென்ற வரன்கள் ஒவ்வொருவரும்
 இவள் அழகை ஓரக்கண்ணால்
 உரசிப் பார்த்த போது நம்மை யாரவது
 வன்  நிச்சையமாக கடத்திக் கொண்டு
 போய்விடுவான் என்று எண்ணியே
 இவள் நினைவுகள்  ஒவ்வொரு நாளும் ஓட்டம் பிடிக்கும் ..!

பின் வேறொரு வரன் இவளைப்
 பெண் பார்க்க வருவதாக சேதி வரும்போது
 ஓட்டம் பிடித்த இவள்நினைவுகள்
தடுக்கி விழுந்து இவள் மனசுக்குள் நொண்டியடிக்கும் ..!

 இவளைப் பார்க்கவரும்
 அந்தத் திரு நாள்தான் இவள் உழைப்பிற்கு
அளிக்கப்படும் விடுமுறை நாளாகும்!

இவள் அணிந்து கொள்ளும்
 கண்ணாடி வளையலுக்குக் கூட
அன்று தான்அதன் ஆயுசில் ஒருநாள் கூடுகிறது !

  இவளை உரசும் உணர்ச்சிகள்
 எத்தனை நாளைக்குத்தான்
 தீப்பொறியாகவே தெரித்து விழும் ?
               
எங்குச் சென்றாலும்  ஊருக்குள் கிசுகிசுப்புச் செய்தி
 இவள் இன்னும் தாலி ஏறாதவள் என்று !

ஒருவன் தாராள மனசோடு
தங்கத்தைக் குறைத்து
தலையில் வெள்ளிக் கம்பியோடு
இரண்டாம் தாரமாக இவளைக் கட்டிக் கொள்ள
காரோடுவந்தான் !
        
இவள் பெற்றோர்களும் எத்தனை காலம்தான்
இவள் வயதை
குறைத்துக்கொண்டே போவார்கள்?

சுமை குறைந்த தென்று தள்ளி விட்டார்கள் ...
இவளும் கழுத்தை நீட்டினாள்
காரில் வந்தவனுக்கே !

விடியற்காலையில்  வீதியெங்கும்
 பேப்பரில் பரபரப்புச் செய்தி... 
முதலிரவில் புதுப்பெண் தற்கொலை !

மறுநாள்   நீதி மன்றத்தில் வழக்கு ...
இவள் ஒரு மன நோயாளி என்று தீர்ப்பு !


O

1 comment:

  1. arumaiyaai samookaththin avalankalai patampitiththulleer

    ReplyDelete

Facebook Google Digg Pinterest