அமைதியாய் இருந்த
என் குளத்தில் முதன்முதலாய்
கல்லெறிந்தவன் நீ!
சூரியனை நோக்கி
பூமிசுற்றி வருவதைப் போல்
உன் பார்வைகள்
என் மீதுச் சுற்றின!
சுதந்திரப் பறவையாய்
இருந்த என்னை
ஒரு ஆயுள் கைதியாய்
சிறைப்பட்டேன் உன்னிடத்தில் !
இராணுவ ரகசியமாய்
நம் காதல் இருக்கட்டும் என்றாய் !
நானும்...
நம்பிக்கையோடு புதைத்து வைத்திருந்தேன்
ஒரு புதையலாய்...
தொலைத் தொடர்பு துறைக்கு மட்டுமே
நம் அந்தரங்கப் பேச்சின் நேரடிச் சாட்சியம்!
திரை மறைவில் பேசிக்கொள்வது
அன்பின் அழுத்தம்
அதிகமாகவே வெளிப்படும் .
என் பெற்றோர்களுக்கு
மாப்பிள்ளை பார்க்கும் படலம்
குறைத்துவிட்டதாக நினைத்து
வந்த வரன்களை எல்லாம்
ஒதுக்கித் தள்ளினேன் !
வாழ்ந்து கொண்டிருப்பது
உன்னுடன் அல்லவா!
காலங்கள் ...
சொல்லிக்கொள்ளாமல் நகர்ந்தன.
என் வயதும்
எனக்குத் தெரியாமலே கூடின .
என் ஆசைகளையெல்லாம்
உன்னால் அழித்துக்கொண்டேன்.
இல்லை
மாற்றிக் கொண்டேன்.
ஒரே இடத்தில்
இருவரும் பணிபுரிந்ததால்
நான் பிறரிடம் பேசுவதிலும் சிரிப்பதிலும்
சிக்கனமாய் இருந்தாலும்
என் மேல் அடிக்கடி
ஒழங்கு நடவடிக்கை இருக்கும் !
அனைத்திற்கும் விளக்கமளித்தால்தான்
அடுத்தகணம் என்னிடம் பேசுவாய் !
அடுத்தகணம் என்னிடம் பேசுவாய் !
உனக்கோ பதவி உயர்வு வந்தது .
மகிழ்ச்சி வெள்ளத்தில் நான் ...
என் தேவாலயத்தை
அலங்கரிக்க வரும்
தேவன் அல்லவா நீ !
அழைப்பு விடுத்தேன்...
இனியும் என்னால் பொறுமை காக்க
முடியாதேன்றேன்.
நீயும் வருவதாகச் சொன்னாய்
உறவினர்களோடு...
உனக்குப் பிடித்ததெல்லாம்
செய்து வைத்து காத்திருந்தேன் ...!
நீயும் வந்தாய்
உன் பெற்றோர்களும் உறவினர்களும்
வந்தார்கள் ... பார்த்தார்கள்...
உணவை ருசித்தார்கள்...!
அன்றுதான் நமக்குள்ளே
இருந்த காதல்
ஊருக்குள் அரங்கேறியது...!
ஆச்சசிரியத்தொடு மகிழ்ச்சி
ஊரில் உள்ள மனிதர்கள்
பெருமூச்சி விட்டார்கள்...
இத்தனை காலங்கள்
எத்தனை வரன்களை
தள்ளி வைத்தாள் பாவிமகள் !
காத்துக்கொண்டிருந்தேன்
கல்யாணத் தேதிக்காக ...
பதில் வந்தது 'நீ கறுப்பு' என்று!
என் அன்பிற்குரியவனே!
நீ என்ன சொல்கிறாய் என்றேன் ?
நானும் அதைத்தான்
வழி மொழிகிறேன் என்றாய் !
அதிர்ந்து போனேன்...!
உடைந்து போனேன்...!
இனி அழுவதற்கு என் கண்களில்
ஒரு சொட்டுக் கண்ணீர்கூட இல்லை!
உன்னிடம் தொலைத்து விட்ட
அந்த வாழ்க்கையை ...
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன் ...
கையில் ஒரு சிம்னி விளக்கோடு...!




No comments:
Post a Comment