Friday, 7 October 2011

இருட்டுக்குள் என் கிராமம்



என் கிராமத்து மக்கள் ...
இன்னும் இருட்டில் இருந்தே  
யாகம் நடத்துகிறார்கள் .

மூட நம்பிக்கையையே  
முரண்டு பிடிக்கிறார்கள் .
மூச்சு விடுவதற்குக்கூடப்
பழைய  பஞ்சாங்கத்தைப்
புரட்டி முத்தமிடுகிறார்கள் .

அன்றாடம் வயிற்றுப் பசிக்குப்
பண்ணையார் வீட்டில்  
கைகட்டி நிற்கிறார்கள்
கூலி வேலைக்கும்  
ஒரு கைக் கூழுக்கும் !

உப்புக்கும் மிளகாய்க்கும்
ஒவ்வொரு வீடாய்த் தாவும்
ஆத்தாக்கள் ஒருபுறம் ...

அரை வயிற்றையாவது
நிரப்பிக் கொள்ள அடுத்த வீட்டை 
எட்டிப் பார்த்து ஏங்கும்  
குழைந்தை குட்டிகள்  ஒருபுறம்

இவர்களுக்குச்  சொந்தமாக
இருக்கும் நிலமோ "தரிசு"

வானம் பார்த்தால்தான் இவர்களின்
வயிறு தன்னிறைவு  அடையும் 
அதுவரை  வறட்சிதான்.

இதனாலேயே   இவர்களின் "இரைப்பை "
சுருங்கி விடுகிறது  இறப்பதற்குள்.

ஊரின் பெயரோ  "பூத்தவனம்"
ஊரைச் சுற்றிலும் அலங்கரிப்பதோ அலரி, சப்பாத்தி,
வேலி  கத்தான்கள்!

தாகத்திற்காக  எப்போதும்  
வாய்திறந்து   கொண்டிருக்கும்
வயல்வெளி   வெடிப்புகள்.

இங்கோ  ஆர்ட்டீசியன்    ஊற்று
கிடைக்கும் என்று ஆழ்கிணறு  தோண்டினால் 
அகப்படுவதோ  இமையமலைக் குன்றுகள்.

இவர்கள் அணிந்து கொள்ளும்
ஆடைகளோ ஒட்டுப் போட்டவை.
அதுவும் அடிக்கடி
அப்பன் முதல் பிள்ளைவரை
இடமாற்றம் அடையும் !

மழைக் காலங்களிலோ
குழைந்தைகள் கோணிப் பைக்குள் குளிரடுக்கும் !

இங்குள்ள சிறுவர்களின் கல்வியோ
காகித ஓடங்கள்!
ஆடுகளும் மாடுகளுமே
இவர்களின் ஆரூயிர் நண்பர்கள் .

என் கிராமத்து மக்கள் ஒவ்வொருநாளும்
உழைப்பின்  வியர்வையிலேயே
குளித்து விடுவதால்
என் கிராமத்து மண்ணை எங்கு தோண்டினாலும்
உப்புத் தண்ணீரே  ஊற்றுநீராக வரும் !



       

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest