தலைப்பாகையோடும் கோமணத்தோடும்
அவசர அவசரமாய்க் கையில்
கொடுவாள் ஏந்தி
எங்கே புறப்படுகிறாய் மனிதா !
யாரைப் பழி தீர்க்க இந்தக் கோலம் ?
உன் வயிற்றுப் பசிக்கு உணவளித்து
உன் உயிரைக் காப்பாற்ற
வானத்தை நோக்கித் தவமிருக்கும்
அந்த வானுயர்ந்த மரங்களையா
வெட்டப் போகிறாய் !
உன் உரிமைத் தாகத்திற்கு -அதன்
உயிரையா குடிக்க வேண்டும் ?
தலைமுறை தலைமுறையாய்
நம்மோடு உறவுகொண்டு வரும்
உயிர்ச் சொந்தங்கள் அல்லவா அவைகள் !
அவற்றை விதவையாக்கினால்
வான்மேகம் அல்லவா
தன் கண்களை இறுக்கிச் சாத்திக் கொள்ளும் !
உன் கையில் ஏன்
மண்ணைண்ணையோடு தீப்பெட்டி ?
யாரைத் தீக்குளிக்கக்
கட்டாயப் படுத்தப் போகிறாய் ?
மனிதர்கள் தீட்ட முடியாத
அந்தப் பசுமை நிறைந்த ....
வானுயர் வண்ண ஓவியங்களையா....?
அவைகள் உனக்கு
அமுதசுரபியாய் அவ்வப்போது
வாரி வழங்குகின்றனவே!
தவறு செய்யாத அதனைத்
தண்டிக்கப் போவது நியாயமா ?
வெட்டுபவனும் நீதான்
வளர்ப்பவனும் நீதானே!
உன்னைவிட உரிமை கொண்டாடுவதற்கு
இந்த மண்ணில் வேறு எவருக்கு உரிமை உண்டு ?
மனிதா ! நீ போரிடு
மரங்களோடு அல்ல !
உன்னை அடக்கி ஆளும் மனிதர்களோடு!
o
TT




No comments:
Post a Comment