Wednesday, 19 October 2011

மெளன விசிறி




அன்றாடந்தான்
உன் வீடு நோக்கி வருவேன் 
எப்பொழுதும்  போல் உன் 
அன்புப் பரிமாறல்கள் அமைந்திருக்கும்.

ஆனால் ,பத்துப் பதினைந்து நாள்களாய்
உன் பாசம் ஏனோ பாசாங்கானது 
என்னிடத்தில் என்றும் சலசலக்கும் 
நீரோடைப் போல் கலகலக்கும் உன் பேச்சு
அன்று மட்டும் அரைகுறை வார்த்தைகளாய் ...

நீ  நடத்திய  ஊமை நாடகம் 
உன் சொந்தங்கள் அனைத்தும் 
என்னை விட்டு அறுந்து போனதோ   
என்று எனக்குள் பிரமிப்பானது !               

ஏனென்றால் என் மனச்சுமையை
வேறு யாரிடமும் இறக்கிவைக்க
என் இதயம் சம்மதிப்பதில்லை.

உன் ஆலயத்தை வழிபடாமல்
என் கால்கள் நகர்ந்ததில்லை .

என் உண்மையின் ரகசியம்
எப்போதும் உன்னிடத்தில் மட்டுமே
முதலில் முத்துக் குளிக்கும் .

அன்று மட்டும் ஏன் நமக்குள் முரண்பாடுகள் ?

எனது வருகை உனக்குச் சுமையாக
இருந்தால் சூரியக் கதிர் கொண்டு
சுட்டெரித்து இருக்கலாம் !

நானும் சுகமாகப் பொசுங்கியிருப்பேன்.
அதை  விடுத்து நீ ஏன்
மெளன விசிறி  கொண்டு
எனக்காகக் கையசைக்க வேண்டும்
விருப்பமில்லாமல் ....

o                   

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest